அறந்தாங்கி பகுதியில் வங்கிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்கள் கொரோனா பரவும் அபாயம்

அறந்தாங்கி பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-07-08 06:23 GMT
அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறந்தாங்கியில் களப்பக்காடு, எல்.என்.புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் களப்பக்காடு, எல்.என்.புரம் பகுதிகளில் உள்ள சாலை நகராட்சி நிர்வாகம் சார்பில் அடைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அறந்தாங்கியில் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

கொரோனா பரவும் அபாயம்

இது குறித்து அறந்தாங்கியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அறந்தாங்கி நகராட்சியில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், விழிப்புணர்வின்றி சுற்றி வருவது அனைவருக்கும் ஆபத்தாகும். அறந்தாங்கி நகராட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்பட 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

ஆனால் வங்கிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், வாடிக்கையாளர்கள் கூட்டமாக நின்றும், பெண்கள் தரையில் அமர்ந்தும் இருப்பதை காண முடிகிறது. வங்கி நிர்வாகத்தினர், வேலை பளுவால் சில நேரத்தில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளிவிட்டு, முக கவசம் அணிந்து வருகின்றனரா என்று கவனிக்க தவறுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது, என்றார்.

பாதுகாப்பான முறையில்...

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் சில வங்கிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அறந்தாங்கி நகராட்சியில் உள்ள அனைத்து வங்கியிலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான முறையில் பண பரிவர்த்தனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் நாகுடியில் உள்ள வங்கியிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்