சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 200 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தனிமைப்படுத்திக்கொண்டார்
இந்நிலையில் சென்னையை சேர்ந்தவரான, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் டாக்டர்கள் அவரை, வீட்டில் முகாம் அலுவலகத்தில் தங்கி சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.