அதிகரித்து வரும் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2020-07-08 02:04 GMT
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி 100-க்கு மேல் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று 200-ஐ தாண்டியது. மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை வேகப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த போதிலும் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது. தற்போது கடைபிடிக்கப்படும் நடவடிக்கையாலே நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகார் கூறப்படும் நிலையும் உள்ளது.

சிறப்பு அதிகாரி

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக சமூக நலத்துறை செயலாளர் மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இதுவரை ஒரு முறை மட்டுமே இந்த மாவட்டத்திற்கு வந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நடவடிக்கை

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணணை தொடர்பு கொண்டு இந்த மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு அதிகாரியை அரசு நியமித்துள்ளது. அவர் தனது பணியினை மேற்கொள்வார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்கள் பலர் தன்னை தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

கலந்தாய்வு

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டருடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கலந்தாய்வு மேற்கொள்வேன். அப்போது பொதுமக்கள் கூறிய கருத்துக்களை அவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மக்களும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்