ஊட்டி, கோத்தகிரியில் மழை: சேறும், சகதியுமாக மாறிய திறந்தவெளி சந்தைகள் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அவதி

ஊட்டி, கோத்தகிரியில் பெய்த மழையால் திறந்தவெளி சந்தைகள் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2020-07-07 23:31 GMT
ஊட்டி,

ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் உழவர் சந்தையில் இருந்த கடைகள் ஏ.டி.சி.யில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டு திறந்தவெளி சந்தையாக செயல்பட்டு வருகின்றன. அதாவது வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

சேறும், சகதியுமாக...

நீலகிரியில் விளையும் மலைக்காய்கறிகள் மட்டுமின்றி சமவெளிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால், காந்தி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் காய்கறிகளை ஏற்றி, இறக்க சரக்கு வாகனங்கள் உள்ளே வந்து செல்வதால் மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இருபுறமும் கடைகள் நடுவில் சேறும், சகதியும் என்ற நிலையில் காட்சி அளிக்கிறது.

இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் நடந்து சென்று வர அவதி அடைந்து வருகின்றனர். மண் ஈரப்பதமாக இருப்பதால் சிலர் வழுக்கி கீழே விழும் ஆபத்து உள்ளது.

நடவடிக்கை

இதனால் ஒரு புறத்தில் வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சிலர் தடுப்புகளை அகற்றிவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சிலர் காய்கறிகளை வாங்க மைதானத்துக்குள் வாகனங்களில் வருவதால் மேலும் மோசமடைகிறது. இதனால் மைதானத்துக்குள் வந்து காய்கறிகளை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வியாபாரிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர். அந்த அளவுக்கு உழவர் சந்தை அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே மைதானத்துக்குள் வாகனங்கள் வராமல் இருக்கவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குளம் போல் தேங்கிய மழைநீர்

இதேபோன்று கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அது திறந்தவெளி சந்தையாக செயல்பட்டு வந்தது.

இதற்கிடையில் கோத்தகிரியில் நேற்று காலை முதல் மதியம் வரை மழை பெய்தது. இதனால் திறந்தவெளி சந்தை சேறும், சகதியுமாக மாறியது. சில இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்