கேத்தி பேரூராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

கேத்தி பேரூராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

Update: 2020-07-07 23:19 GMT
ஊட்டி, 

ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலைக்கு கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலர் வந்து சென்றதால் சக தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 59 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 71 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 20 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி, இ.பி.ஹவுஸ், உல்லாடா, ஜீபுள் சாலை, திருவள்ளுவர் நகர், வெலிங்டன் கன்டோன்மெண்ட்டுக்கு உட்பட்ட ஜெயந்திநகர் மற்றும் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட புரூக்லேண்ட் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி, அங்கு நடைபெற்று வரும் சுகாதார பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீடு, வீடாக ஆய்வு நடத்தப்படுகிறதா, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடும் நடவடிக்கை

அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது 45 தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை பல்வேறு துறைகள் இணைந்து வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். வெளியாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லாதவாறு கண்காணிக்கப்படுகிறது. கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடங்களுக்கு வராமல் இருக்க வேண்டும். உத்தரவை மீறி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், குன்னூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்