தன்னார்வலர்கள் செயல்பாடு குறித்து சாத்தான்குளத்தில் கிராமம், கிராமமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

தன்னார்வலர்கள் செயல்பாடு குறித்து சாத்தான்குளத்தில் கிராமம், கிராமமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

Update: 2020-07-07 23:00 GMT
சாத்தான்குளம்,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கும், கொரோனா தடுப்பு தன்னார்வலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? என்பது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் உத்தரவிட்டார். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒவ்வொரு குழுவாக பிரிந்து சாத்தான்குளம் பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் கிராமங்களுக்கு சென்று அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள் 31 பேர் பணியாற்றினார்கள். இவர்கள் சாத்தான்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள மடத்துவிளை, வேலவன்புதுவிளை, கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த தன்னார்வலர்களில் 13 பேர் கல்லூரி மாணவர்கள், 9 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள், 6 பேர் டிரைவர்கள், 2 பேர் கல்லூரி பேராசிரியர்கள் ஆவார்கள்.

இவர்களின் செயல்பாடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளத்தில் உள்ள அவர்களின் வீடு உள்ள பகுதிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கிராமம், கிராமமாக சென்றும் தன்னார்வலர்கள் பற்றி விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த அன்று போலீஸ் நிலையத்தில் இருந்த தன்னார்வலர்கள் யார், யார்? என்றும் கேட்டு அறிந்தனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “தன்னார்வலர்களில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளதால் அவர்கள் தொண்டு உள்ளத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், தன்னார்வலர்களில் ஒரு சிலர் போலீஸ்காரர்களுடன் சேர்ந்து தாங்களும் போலீஸ்காரர்கள் என்று நினைத்து வாகனங்களை மறித்து அத்துமீறி செயல்படுகிறார்கள். அவர்களால் போலீசாருக்கும், தன்னார்வலர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது“ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, தன்னார்வலர்களின் 7 பேர் நேற்று திடீரென்று வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வேலைக்காக வெளியூர் சென்றார்களா?, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக சென்று உள்ளனரா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்