மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 275 ஆக உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்து வந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது. நேற்று மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் புதுக்கோட்டை அம்பாள்புரத்தை சேர்ந்த 5 பேருக்கும், கீழ ராஜ வீதியை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் 44 வயது பெண்ணுக்கும், மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், போஸ் நகரை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கும், விஸ்வகர்மாநகரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படை வீரர்
அரிமளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட செட்டி ஊரணி பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய நெருங்கிய உறவினர் இறந்ததால், துக்கம் விசாரிக்க அரிமளத்தில் இருந்து ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பியுள்ளார். இதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில் ஒருவருக்கும், பொன்னமராவதியில் ஒருவருக்கும் என மொத்தம் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாய்- மகனுக்கு கொரோனா
கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஏ.டி.கே. நகருக்கு சென்ற வாரம் சென்னையில் இருந்து 4 பேர் வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 30 வயதுடைய பெண்ணுக்கும், அவருடைய மகனான 8 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்புடைய அந்த பகுதியை சேர்ந்த 19 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது. இதில் 238 பேர் சிகிச்சையில் உள்ளனர். 131 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.