திருச்சி அருகே பயங்கரம்: பள்ளி மாணவி எரித்துக்கொலை பொதுமக்கள் மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு
திருச்சி அருகே பள்ளி மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சோமரசம்பேட்டை,
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி(வயது 14). இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.
பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு முள்காட்டில் கொட்டச் சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.
எரித்துக் கொலை
அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவளை மர்ம நபர்கள் சிலர் மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி அணிந்திருந்த இரவு உடை கிழிந்திருந்தது. இடுப்புக்கு மேல் முழுவதும் எரிந்து போய் இருந்தது. பின்னர் சிறுமியின் உடலை போலீசார் மீட்க முயன்றபோது, கிராம மக்கள் ஒன்று திரண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யும்வரை பிணத்தை எடுக்க விட மாட்டோம் என்று மறியலில் ஈடுபட்டதோடு ஆம்புலன்சு கண்ணாடியை உடைத்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன்பேரில் சமாதானம் அடைந்தனர். பின்னர் சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து சம்பவம்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.