திருச்சியில் ரேஷன் பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, திருச்சியில் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
திருச்சி,
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக வருகிற 31--ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக ஜூலை மாத அத்தியாவசிய பொருட்களான அரிசி, பாமாயில், சர்க்கரை, துவரம்பருப்பு ஆகியவை ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகிற 10-ந் தேதி முதல் விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகளிலும் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் 10-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.
டோக்கன் வினியோகம்
அதன்படி, எந்தெந்த கிழமைகளில் ரேஷன்கடைகளில் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பதற்காக நேற்று முதல் திருச்சியில் வீடுகள்தோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. 9-ந் தேதிவரை இந்த டோக்கன் வழங்கப்படுகிறது.
மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரப்படி ரேஷன்கடைகள் செயல்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடை இயங்காது
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பந்தேகானா தெரு, பூலோகநாத சுவாமி கோவில் பகுதியில் உள்ள 4 ரேஷன்கடைகளில் மொத்தம் 3,500 கார்டுதாரர்கள் உள்ளனர். பந்தேகான கடை விற்பனையாளர் பாபு நேற்று ஒரேநாளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகம் செய்ததாக தெரிவித்தார். இதுபோல இதர ரேஷன்கடை பணியாளர்களும் டோக்கன்களை வினியோகம் செய்தனர்.
பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அன்றைய தினங்களில் ரேஷன் கடை இயங்காது.