பெரம்பூரில் அரசு பாதுகாப்பு மையத்தில் 14 பேருக்கு கொரோனா
பெரம்பூரில் உள்ள தமிழக அரசின் நகர்ப்புற வீடற்றோர் பாதுகாப்பு மையத்தில் தங்கி இருந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
திரு.வி.க.நகர்,
சென்னை பெரம்பூர் தீட்டித்தோட்டம் 4-வது தெருவில் தமிழக அரசின் நகர்ப்புற வீடற்றோர் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு ஆதரவற்ற நிலையில் சாலையோரம் சுற்றித்திரியும் முதியவர்களை அழைத்து வந்து பாதுகாப்பது வழக்கம். இந்த பாதுகாப்பு மையத்தில் ஆதரவற்ற 36 முதியவர்கள் தங்கி இருந்தனர்.
இவர்களில் 14 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் 55 முதல் 97 வயது உள்ளவர்கள். 14 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களை மற்ற பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் மண்டலத்தில் 29 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 137 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 51 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 34 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த 23 ஆயிரத்து 675 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது முகாமில் தங்கி இருந்த ஓமன் நாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து வந்த தலா 3 பேருக்கும் என மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 67 ஆயிரத்து 903 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டார் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்தது.
குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் ஏட்டு, உளவு பிரிவு போலீஸ்காரர் உள்பட ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.