தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளம் தன்னார்வலர்கள், போலீஸ்காரர்களிடம் விசாரணை பென்னிக்ஸ் நண்பர்கள் ஆஜர்
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் தன்னார்வலர்கள், போலீஸ்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். பென்னிக்ஸ் நண்பர்களும் 2-வது நாளாக ஆஜரானார்கள்.
தூத்துக்குடி,
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் தன்னார்வலர்கள், போலீஸ்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். பென்னிக்ஸ் நண்பர்களும் 2-வது நாளாக ஆஜரானார்கள்.
தந்தை, மகன் சாவு
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதியிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பென்னிக்சின் நண்பர்களிடம் விசாரணை நடந்தது. நேற்று 2-வது நாளாக பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தன்னார்வலர்கள்
கொரோனா தடுப்பு பணிக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் 10 தன்னார்வலர்கள் பணியாற்றி வந்தார்கள். தந்தை, மகனை போலீசார் தாக்கியபோது இந்த தன்னார்வலர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் 10 தன்னார்வலர்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
அதன்படி, தன்னார்வலர்கள் கணபதி, இசக்கிதுரை, ராஜா உள்பட 5 பேர் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் விசாரணை
மேலும், சம்பவத்தின்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, போலீஸ் ஏட்டு பியூலா, கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் தாமஸ் உள்பட 10 போலீஸ்காரர்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டனர். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அதேபோன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் தினமும் அழிந்து போகும் வகையில் மாற்றி அமைத்தது யார்?, எதற்காக அது போன்று மாற்றப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அழிந்த காட்சிகளை மீண்டும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
ஐ.ஜி. சங்கர்
இதுகுறித்து தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறியதாவது:-
நாங்கள் பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி வருகிறோம். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கொரோனா தடுப்பு பணி தன்னார்வலர் களை விசாரணைக்கு அழைத்து உள்ளோம். அதே போன்று இறந்தவர்களின் உறவினர்களையும் விசாரணைக்கு அழைத்து உள்ளோம். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.