வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2020-07-06 00:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் இந்த மாத (ஜூலை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும் அன்றைய தினத்தில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள் வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, கார் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து கடைகளும் மூடல்

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் நிலையங்களில் சில ஊழியர்கள் பணியில் இருப்பதை காண முடிந்தது. மேலும் அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் அரசுப்பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களை தவிர பிற வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே அரசு, தனியார் பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் ஓடாததால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளும் வெறிச்சோடின. மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சாலைகள் வெறிச்சோடின

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் வழக்கம் போல் சாலைகளில் சென்றதை காணமுடிந்தது. காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் காரணம் இன்றி அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தனர்.

சத்துவாச்சாரி காந்திநகர், காகிதப்பட்டறை, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையோரம் மற்றும் கடைகளின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணி சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை மற்றும் கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, நேஷனல் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் போலீசார் சத்துவாச்சாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்