சேலத்தில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
சேலத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம்,
சேலத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருந்தாலும் இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எந்த ஒரு தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டன. உழவர் சந்தைகள், தினசரி காய்கறி மார்க்கெட், டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்ததால் விடுமுறை நாளான நேற்று வீதிகளில் கூடுவதை பொதுமக்கள் தவிர்த்து வீடுகளில் முடங்கினர்.
வெறிச்சோடின
விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்பட பலர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து யாரும் வேலைக்கு செல்லவில்லை. காய்கறி, பழ வியாபாரிகள் வியாபாரத்திற்கு செல்லவில்லை. மேலும் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
சேலம் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதைப்போல் கடைவீதி, முதல் அக்ரஹாரம், சொர்ணபுரி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், அழகாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.
போலீசார் எச்சரிக்கை
5 ரோடு, கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி, திருச்சி ரோடு, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனை, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சாலையில் சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர்.
அதேநேரம், முழு ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், கொண்டலாம்பட்டி மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து மேம்பாலங்களும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் நபர்களை கண்டறியவும், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சேலத்தை தொடர்ந்து மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம், கெங்கவல்லி, வாழப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.