கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார்.
கோவை,
கோவையில் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ள குனியமுத்தூர், இடையர் வீதி, சாவித்திரி நகர், திருமூர்த்தி நகர், மில்வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1300 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாநகர பகுதியில் மட்டும் தினமும் 3 முகாம்கள் வரை நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாநகரில் மட்டும் 23 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளுக்கு கலெக்டர் ராஜாமணி திடீரென்று சென்றார்.
கலெக்டர் ஆய்வு
பின்னர் அந்தப்பகுதியில் செய்யப்பட்டு உள்ள பணிகளை ஆய்வு செய்தார். அதுபோன்று குனியமுத்தூருக்கு சென்ற கலெக்டர், அங்கு நடந்து வரும் மருத்துவ முகாமையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, முதற்கட்டமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், அவர்கள் சார்ந்த பகுதிகளில் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல், தொடர் தொற்றுகள் கண்டறியப்படும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து தனிமைப்படுத்துதல் என பல்வேறு தொடர்ச்சியான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 30 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதில் 27 மாநகராட்சி பகுதியிலும், 3 ஊரகப்பகுதிகளும் உள்ளன. இதுபோன்ற பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம், புதிய தொற்றுகள் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மிகக்கவனமுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம். அரசின் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளில் அலட்சியம் காட்டக்கூடாது. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற சுய கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பரிசோதனைகள்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரின் அறிவுரையின்படி, கோவை மாவட்டத்தில் பகுதி வாரியாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (நேற்று) குனியமுத்தூர் ரைஸ் மில்வீதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தி, புதிய தொற்றுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது.