முழு ஊரடங்கு அமல்: வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள் கடைகள்-வணிக நிறுவனங்கள் மூடல்; தெருக்கள் வெறிச்சோடின

கோவில்பட்டி பகுதியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் நூறு சதவீதம் மூடப்பட்டிருந்தன

Update: 2020-07-05 22:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி பகுதியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் நூறு சதவீதம் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதாலும், வாகன போக்குவரத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டதாலும் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் நேற்று முழு உரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சந்தைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் பங்குகளும் செயல்படவில்லை. ஆட்டோக்கள், வாடகை கார்கள், வேன்கள் ஓடவில்லை. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், பத்மாவதி ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர எல்கை மற்றும் மாவட்ட எல்கையில் போலீசார் செக்போஸ்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களிலும் டீக்கடை, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். விவசாய பணிகளும் நடைபெறவில்லை.

உடன்குடி

முழு ஊரடங்கையொட்டி உடன்குடி பஜார் 4 ரதவீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் ஓடாததால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தெருக்களில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார் வாகனத்தில் சென்றவாறு ஒலிபெருக்கியில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தவாறு சுற்றி வந்தார்.

அவரது வாகனம் உடன்குடி சிதம்பரம் தெருவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் வேகமாக திருப்பி ஓட முயற்சித்ததால், மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர். அவர்களை போலீசார் பிடித்து கண்டித்து அனுப்பி வைத்தனர். காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டமின்றி உடன்குடி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் ஆகிய ஊர்களிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார், வேன்கள் ஓடவில்லை. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், தெருக்கள் வெறிச்சோடின. ஊர் எல்கைகளில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மார்க்கெட் மூடப்பட்டது. வணிக வளாகம், ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்தும் முடங்கி இருந்தது. மக்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.

இதேபோன்று குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்