சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: போலீஸ் நண்பர்கள் குழுவினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை பென்னிக்ஸ் நண்பர்களும் ஆஜர்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணைக்கு பென்னிக்ஸ் நண்பர்களும் ஆஜர் ஆனார்கள்.
தந்தை-மகன் கொலை வழக்கு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, தந்தை-மகன் கொலை வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கும் தொடர்பு இருப்பதாக, இறந்தவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் பேய்க்குளத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன் இறந்ததாக, தாயார் வடிவு புகார் தெரிவித்து இருந்தார். மகேந்திரனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, அங்கு போலீஸ் நண்பர்கள் குழுவினரும் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் நண்பர்கள்
இதனால் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களையும் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 18 பேரில் 12 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 12 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒரு குழுவினர், போலீஸ் நண்பர்கள் குழுவினரை தேட ஆரம்பித்தனர். அதன்படி 6 பேரை மடக்கி பிடித்ததாகவும், அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நண்பர்கள் குழுவினர் இடையே கலக்கம் ஏற்பட்டு உள்ளது.
பென்னிக்ஸ் நண்பர்கள்
இதற்கிடையே, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்ற போதும், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய போதும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதன்படி இறந்த பென்னிக்ஸ் நண்பர்களான ரவிசங்கர், ரவிச்சந்திரன், மணிமாறன், சங்கரலிங்கம், ராஜாராமன் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக அழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களிடம் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அணில்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மதியம் 2.30 மணி வரை நடந்தது. மீண்டும் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 போலீசாரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.