இன்று முழு ஊரடங்கு: திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் இறைச்சி-மீன் கடைகளிலும் குவிந்தனர்
கொரோனா பரவலை தடுக்க இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் அலைமோதினர். இறைச்சி, மீன் கடைகளிலும் கூட்டம் குவிந்தது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அது சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. திண்டுக்கல் உள்பட பிற மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த ஜூலை மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாமல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து விதமான கடைகளும் அடைக் கப்படுகிறது.
பொருட்கள் வாங்க குவிந்தனர்
பொதுவாக வேலைக்கு செல்வோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே தேவையான பொருட்களை வாங்கினர். அந்த வகையில் திண்டுக்கல்லை பொறுத்தவரை மேற்கு ரதவீதி, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மளிகை பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
மேலும் மாதத்தின் தொடக் கம் என்பதால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் பல கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட், சாலையோர கடைகளில் மக்கள் காய்கறிகளை வாங்கினர்.
இறைச்சி-மீன் கடைகள்
மேலும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நேற்று பலரும் வீடுகளில் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டனர். அதிலும் ஒருசிலர் குளிர்சாதன பெட்டியில் வைத்து இன்று சமைத்து சாப்பிடுவதற்காக மீன், இறைச்சியை கூடுதலாக வாங்கி சென்றனர்.
இதனால் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காகவே திண்டுக்கல்லில் மீன், இறைச்சி கடைகள் நேற்று மாலை வரை செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீன், இறைச்சியின் விலையும் கணிசமாக உயர்ந்தது.