கள்ளக்குறிச்சியில் 85 பேருக்கு கொரோனா தொற்று விழுப்புரத்தில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
கள்ளக்குறிச்சியில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சியில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
85 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 1,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று 364 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 443 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நூலகர் பலி
தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடையவர், கள்ளக்குறிச்சி மாவட்ட நூலகத்தில் 3-ம் நிலை நூலகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் டயாலிசிஸ் செய்வதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 582 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 388 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, 27 ஆண்கள், 6 பெண்கள் என மேலும் 33 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் திண்டிவனம் கோபாலபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றி வரும் 54 வயதுடையவரும் அடங்குவர்.
மேலும் விழுப்புரம் அலமேலுபுரம், நன்னாடு, கோலியனூர், கல்பட்டு, விழுப்புரம் சேர்மன் ஜனகராஜ் கார்டன், விக்கிரவாண்டி, ஏ.புதூர், எடையானூர், தேவனூர், அரகண்டநல்லூர், சஞ்சீவிராயன் பேட்டை, மோழியனூர், திருக்கோவிலூர், கொடியம், பாலப்பாடி, மேல்அத்திப்பாக்கம், ஒட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ரோசனை போலீஸ் நிலையத்தில பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரு முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பானது 1,020 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் குணமடைந்தனர்
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 19 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து வந்த 201 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 343 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.