ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மன அழுத்தத்தை போக்க கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மன அழுத்தத்தை போக்க கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-07-02 23:16 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 39 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்ட 44 பேர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், அறிகுறி தென்பட்ட 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு மட்டும் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு ஊட்டியிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 35 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. படுக்கைகள் இடைவெளி விட்டு போடப்பட்டு இருக்கிறது.

மன அழுத்தம்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மூன்று வேளையும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவர்களை முழு பாதுகாப்பு கவச உடையணிந்த டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஆஸ்பத்திரியிலேயே கண்காணிக்கப்பட்டும், சிகிச்சை பெற்றும் வருவதால் மன அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

யோகா பயிற்சி

இதை கருத்தில் கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலையில் அறைக்கு உள்ளேயே யோகா பயிற்சியை நோயாளிகள் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மன வலிமை அதிகரிக்கும். ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்தார். அவரை டாக்டர்கள் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு சந்தேக நபர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்