காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-02 23:30 GMT
காரைக்கால், 

காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டம்

காரைக்கால் மாவட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக் கண்ணன், மருத்துவத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தரமான உணவு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய உடனே, புதுச்சேரி மாநிலத்தில் எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 5 முறை ஊரடங்கு அறிவித்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

காரைக்காலை பொறுத்தவரை, நீண்ட நாட்களாக பச்சை மண்டலமாக இருந்துவந்தது. முதலில் சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும், பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் குணமடைந்த நிலையில், மீண்டும் சென்னையில் இருந்து வந்தவர்களால் தொற்று பரவ ஆரம்பித்தது. தற்போது 42 பேர் கொரோனா தொற்று பாதித்து, அதில், 27 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவு மற்றும் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பரிசோதனை மையம்

கொரோனா பரிசோதனைகளை திருவாரூருக்கு அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகே முடிவுகளை பெற வேண்டியது இருப்பதால் காரைக்காலிலேயே கொரோனா பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் அதை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் மொத்தம் 27 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. இந்த பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தொல்லை கூடாது

பாசிக், பாப்ஸ்கோ, கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட நிறுவன ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படும். மாநில அரசு, வரிப்பணத்தை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய சூழல் இருப்பதால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் யாரும் எவ்வித தொல்லையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்