நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

Update: 2020-07-01 23:30 GMT
நெல்லை,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

ஊரடங்கு

கொரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் மாதம் முழு ஊரடங்கும், தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பஸ், ரெயில்கள், ஆட்டோ, கார்கள் இயங்கவில்லை. இதன் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆட்டோ, கார்கள் இயங்கின.

கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் அரசு பஸ்கள் மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்டன. அப்போது பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து பயணம் செய்தனர். மேலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல பஸ்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று அதிகரித்தது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வேண்டும் என்பதால் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது.

பஸ்கள் நிறுத்தம்

மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டம் அதாவது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு இயக்கப்படக்கூடிய 1,300 பஸ்களில், 450 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. கடந்த சில தினங்களாக 150 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. கிராம புறங்களில் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து பஸ் போக்குவரத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் நேற்று முதல் அனைத்து பஸ்களும் அடியோடு நிறுத்தப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டன. பஸ்நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

வெறிச்சோடியது

நெல்லை புதிய பஸ்நிலையம் பஸ் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி மார்க்கெட் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இருந்தாலும் அதிகாலையில் காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு லாரிகள் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட மினிபஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அருகில் உள்ள ஊர்களுக்குகூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.

நெல்லை, தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து அரசு அலுவலகத்திற்கு பணிக்கு வருகின்ற அரசு ஊழியர்களுக்காக காலை, மாலையில் 9 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து ஏறி சென்றனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய 4 பணிமனைகளில் இயங்கி வந்த 117 அரசு பஸ்களும் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தப்பட்டது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசி நகரசபை சார்பில் நோய் தொற்றை கட்டுப்படுத்த பஸ் நிலையத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்