அகஸ்தியர்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா

அகஸ்தியர்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது

Update: 2020-07-01 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம்,

அகஸ்தியர்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. களக்காடு பகுதியில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் 3 பேருக்கு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. எனினும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டிக்கு ஒருவர் வந்தார். அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்த நிலையில் அவர் கடந்த மாதம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த வீட்டிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயக மூர்த்தி, சிவந்திபுரம் சுகாதார ஆய்வாளர் திருப்பதி, செயலர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின் ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

களக்காடு

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர்களுக்கும் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அதே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதுபோல கலுங்கடியை சேர்ந்த வாலிபருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து கீழப்பத்தை, கலுங்கடி பகுதியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்