கும்பகோணத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
கும்பகோணத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.
தொழில் அதிபர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தில் வசித்து வரும் மறையூர் சுப்பிரமணியன் ராமதாஸ் மகன்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். பிரபல தொழில் அதிபர்களான இவர்கள் இருவரும் இணைந்து பல நாடுகளில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணத்தில் அர்ஜுன் ஹெலிகாப்டர் நிறுவனம், விக்டரி நிதி நிறுவன குழுமம், கிருஷ் பால் உற்பத்தி போன்ற பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக கணேஷ், சுவாமிநாதன் ஆகிய இருவரும் கொள்கை அளவில் பா.ஜனதா கட்சியில் செயல்பட்டு வருகின்றனர்.
கட்சியில் இணைந்தனர்
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட பா.ஜனதா கட்சியில் தீவிரமாக செயல்படுவதற்கு முடிவெடுத்து கட்சியில் முறைப்படி நேற்று இணைந்தனர். இதையொட்டி நேற்று மாவட்ட பா.ஜனதா சார்பில் தீவிர உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ரவிக்குமார், நகர தலைவர் ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து இருவரையும் பா.ஜனதா கட்சியில் இணைத்து கொண்டனர். இதுகுறித்து எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக கொள்கை அளவிலும், மனதளவிலும் பா.ஜனதாவில் இருந்து வருகிறோம். இப்போது தீவிர உறுப்பினராகி தஞ்சை மாவட்ட பா.ஜனதா கட்சியில் முழுமையாக செயல்பட உள்ளோம்’ என்றனர்.