சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவுக்கு கண்டனம்: சேலத்தில் செல்போன் கடைகள் அடைப்பு

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் நேற்று செல்போன் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2020-06-25 06:06 GMT
சேலம், 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31). செல்போன் கடை நடத்தி வந்தார். ஊரடங்கையொட்டி செல்போன் கடையை மூடுவது தொடர்பாக இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் செல்போன் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மொபைல் போன் விற்பனை மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் செல்போன் விற்பனை மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே வீரபாண்டியார் நகர் பகுதியில் புதிய செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் உள்ளன.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அங்குள்ள அனைத்து செல்போன் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்போன் கடை உரிமையாளர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டதோடு புதிய செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் செல்போன் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் கடைகள் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து செல்போன் விற்பனை சங்க நிர்வாகிகள் கூறுகையில், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை தாக்கிய போலீசார் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீடாக ரூ.1 கோடி நிவாரணமும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு பிறகாவது வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்