திருவையாறு அருகே, சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி

திருவையாறு அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

Update: 2020-06-25 06:05 GMT
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கீழத்திருப்பூந்துருத்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் உமாபதி(வயது 48). அதே ஊர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(60). இவர்கள் இருவரும் வாழை மரத்தில் பூ நாறு உரிக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று மதியம் இருவரும் வேலையை முடித்துக்கொண்டு கண்டியூரில் இருந்து கீழத்திருப்பூந்துருத்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். பாத்திமா நகர் அருகே மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உமாபதி, சண்முகம் ஆகிய இருவரது உடல்களையும் கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவர் பலியானதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்