முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை சாலைகள் - பஸ், ஆட்டோ ஓடவில்லை

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதுரை நகரில் பஸ், ஆட்டோ ஓடவில்லை.

Update: 2020-06-24 22:30 GMT
மதுரை,

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த மாதத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் இருந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 3 இலக்க எண்களாக உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் மருத்துவ பணிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

நேற்று முழு ஊரடங்கு அமலானதை தொடர்ந்து நகரில் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களை தவிர மற்றவர்கள் வாகனங்களில் வந்தால் போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆட்டோக்கள் இயங்கவில்லை.

எப்போது பரபரப்பாக இயங்கும் கோரிப்பாளையம், அரசரடி, தெற்குவாசல், காமராஜர் சாலை, காளவாசல் ஆகிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. திறந்திருந்த மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் இல்லை.

அதேபோல் கீழமாசி வீதி மற்றும் முக்கிய மார்க்கெட் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதித்த இடங்களில் மட்டும் காய்கறி விற்பனை நடந்தது. அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. கீழமாசி வீதியில் மொத்த வியாபாரத்திற்கு நள்ளிரவு மட்டும் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் பகலில் கீழமாசி வீதியும் மக்கள் நடமாட்டமின்றி காட்சி அளித்தது.

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. இறைச்சி, கோழி மற்றும் மீன் மொத்த விற்பனை கூடங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. வைகை ஆற்றின் தென்கரை பகுதி, நெல்பேட்டை மற்றும் தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட அனைத்து இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 45 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

மதுரை மாநகரட்சி பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தால் மதுரை மண்டலத்தில் உள்ள பிற பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் அனைத்தும் மாநகராட்சி எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் இன்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மாவட்டத்திற்குள் வர முடியாது. அதேபோல் மதுரையின் பிற பகுதிகளில் இருப்பவர்களூம் மதுரை நகரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மதுரை நகருக்கு வரமுடியாது.

மதுரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் செய்திகள்