வேலூர் மாவட்டத்தில், கருப்புபேட்ஜ் அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.
வேலூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புபேட்ஜ் அணிந்து தமிழகம் முழுவதும் நேற்று பணியாற்றினர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்புபேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வருவாய் ஆய்வாளர் சேகர் கொரோனா நிவாரணப்பணியின்போது விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் மற்றும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பான ஆணைகள் வெளியிட வேண்டும்.
மாநில அளவில் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் உள்பட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட அனைவரும் கருப்புபேட்ஜ் அணிந்து பணி புரிந்து வருகிறோம்.
தாலுகா அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலங்களில் பணிபுரிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை கருப்புபேட்ஜ் அணிந்து பணிபுரிய உள்ளோம். மேலும் நாளை மறுதினம் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.