சென்னையில் கொரோனாவுக்கு போலீஸ் அதிகாரி மனைவி பலி

சென்னையில் கொரோனாவுக்கு போலீஸ் அதிகாரி மனைவி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் உள்பட புதிதாக 39 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டது.

Update: 2020-06-24 20:11 GMT
சென்னை, 

சென்னை போலீஸ்துறையையும், அவர்களது குடும்பத்தினரையும் கொரோனா தொடர்ந்து மிரட்டி வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீசார் வரை கொரோனா பிடியில் சிக்கி வருகிறார்கள். அதன்படி ஊனாமாஞ்சேரியில் உள்ள சென்னை போலீஸ் அகடமியின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், அவரது மனைவியும் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் போலீஸ் அதிகாரி சங்கரன் உடனடியாக குணம் அடைந்தார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் பம்மலில் உள்ள தனது வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், அவருடைய மனைவி உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவருடைய உயிர் பிரிந்தது. பின்னர் அவருடைய உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை போலீசில் 937 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 39 போலீசார் கொரோனா பிடியில் சிக்கினார்கள். இதன் மூலம் சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு 976 ஆக அதிகரித்தது. நேற்று 10 போலீசார் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்தது.

மேலும் செய்திகள்