திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,313 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-23 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகள், காட்டாம்பூண்டி, கலசபாக்கம், வந்தவாசி போன்ற பல்வேறு இடங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட கலெக்டர் கந்தசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் வைரஸ் தாக்கம் பல்வேறு இடங்களுக்கு பரவி வருகிறது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வரும் பாதிக்கப்பட்டோர் குறித்த பட்டியலில் 100-க்கும் மேற்பட்டோர் இடம் பிடித்து வருவது திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டோருக்கான பட்டியலில் 114 பேர் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக காட்டாம்பூண்டியில் 17 ஆண்களும், 20 பெண்களும் என 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருவண்ணாமலை நகராட்சியில் 5 ஆண்களும் 7 பெண்களும், வந்தவாசியில் 5 ஆண்களும் 7 பெண்களும், நாவல்பாக்கத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும், தச்சூரில் 2 ஆண்களும் 4 பெண்களும், தெள்ளாரில் 5 ஆண்களும் 3 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சேத்துப்பட்டு, செங்கம், போளூர், கலசபாக்கம், மேற்கு ஆரணி, கீழ்பென்னாத்தூர் போன்ற பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 114 பேரில் ஒரு வயது ஆண் குழந்தை உள்பட 7 குழந்தைகள் அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் சென்னையில் இருந்து திரும்பியவர்கள், 51 பேர் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள். நேற்றைய நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் திருவண்ணாமலை கால்நடைத்துறை இணை இயக்குனருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது கார் டிரைவருக்கு முதலில் ஏற்பட்டது. அவர் மூலம் இணை இயக்குனருக்கு பரவியது. மேலும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கும் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் மூடப்பட்டது. அங்கு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்