பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்
செந்துறையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ.வினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில், திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் முன்னிலை வகித்தார். இதில் கிளை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம், மோட்டார் தொழிலாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் கொரோனா நிவாரணம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதேபோல் பழனியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
செந்துறையில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, சங்கத்தினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.