பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம்,
சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமை தாங்கினார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேத்தூர் நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் வக்கீல் பகத்சிங், ராஜகுரு, முத்தையா, விவசாய சங்க உறுப்பினர் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முத்துசாமிபுரத்தில் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி தலைமையிலும், செட்டியார் பட்டியில் விவசாய சங்க செயலாளர் அய்யணன் தலைமையிலும், தேவதானத்தில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமையில் இரு சக்கர வாகனத்திற்கு மாலையிட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இரு சக்கர வாகனத்தை மனிதன் கயிறு கட்டி இழுத்து செல்வது போன்றும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சக்கணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் காதர்மொய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் அருகே கவுண்டம்பட்டியில் மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையிலும், கிளை செயலாளர் பாண்டியராஜன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் 29 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் 135 பேர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 28 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 310 பேர் கலந்து கொண்டனர்.