கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - சித்தராமையா வலியுறுத்தல்
கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய-மாநில அரசுகளின் தொடர் தோல்விகளால் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24-ந் தேதி நாட்டு மக்களிடம் பேசி, நள்ளிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார். அதன் பிறகு நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு தேவை இருக்கவில்லை. ஊரடங்கால் கோடிக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள், விவசாயிகள் கடும் கஷ்டத்தை அனுபவித்தனர். ஏற்கனவே பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி திட்டம் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கால் நாட்டின் உற்பத்தி துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமுதாய பரவலாக மாறிவிட்டது. சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
மக்கள் உழைத்து சாப்பிட வழி இல்லாமல் தவிக்கிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன. மக்களிடம் பணம் இல்லை. இந்த சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
தோல்வி அடைந்துவிட்டது
இந்த கட்டண நிர்ணயம், உயர் நடுத்தர மக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசுக்கு கண், காது, இதயம் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. மக்களுக்கு ஆதரவாக உள்ள அரசு இத்தகைய வேலையை செய்யாது. ஒரு குடும்பத்தில் 4, 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்ந்தால் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும். இந்த செலவை மக்களால் தாங்க முடியுமா?.
அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வந்துள்ளன. 35 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகளை வழங்குமாறு மாநில அரசு கேட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு 90 கருவிகளை மட்டுமே வழங்கியுள்ளது. விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஒரு கொரோனா நோயாளி, பல்வேறு புகார்களை கூறியுள்ளார். இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா விவகாரத்தை கையாளுவதில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது.
இலவச சிகிச்சை
மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.