செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 4 ஆயிரத்து 30 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிப்பு 4 ஆயிரத்து 30 ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-06-23 22:30 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் சண்முகா நகர் 2-வது தெருவை சேர்ந்த 32 வயது வாலிபர், ஏ.என்.காலனி பகுதியில் வசிக்கும் 52 வயது ஆண், கூடுவாஞ்சேரி காமாட்சி நகரை சேர்ந்த 31 வயது இளம்பெண், நந்திவரம் என்.பி.ஆர். நகர் செம்பருத்தி தெருவை சேர்ந்த 31 வயதுடைய வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள வல்லாஞ்சேரி விஜயலட்சுமி நகரில் வசிக்கும் 34 வயது வாலிபர், வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், அண்ணா சாலையை சேர்ந்த 45 வயதுடைய ஆண், காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதி, மதுரை தெருவில் வசிக்கும் 24 வயது வாலிபர், ஊரப்பாக்கம் ரேவதிபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் 58 வயது பெண், பிரியா நகர், விக்ரம் தெருவில் வசிக்கும் 25 வயது வாலிபர், பொத்தேரி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர், ஒத்திவாக்கம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 30 ஆக உயர்ந்து. இவர்களில் 2,027 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,945 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 80 வயது, 70 வயது மூதாட்டிகள், 90 வயது முதியவர், 54 வயது ஆண் ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் அனுயதிக்கப்பட்டார். ஆதனூர் ஊராட்சியில் உள்ள ஜெயலஷ்மி நகர் பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், 13 வயது சிறுவன் மற்றும் 36 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் 3 பேரும் டாக்டர்களின் அறிவுறைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,286ஆக உயர்ந்தது. இவர்களில் இதுவரை 611 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 661 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 156 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,826 ஆக உயர்ந்தது. அவர்களில் 1,470 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,312 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 44 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்