கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு - முன்னாள் மந்திரி ஆரிப் நசீம்கான் வலியுறுத்தல்
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஆரிப் நசீம்கான் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மராட்டிய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் 420 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதில் முஸ்லிம்கள் 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆரிப் நசீம்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
நான் சிறுபான்மை நலத்துறை மந்திரியாக இருந்த போது காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் அது பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை.
அமல்படுத்த வேண்டும்
தற்போதைய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் நடந்து வருகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக உறுதியளித்தன. அவர்கள் கூறியபடி அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தால் தற்போதைய அரசு பணியாளர் தேர்வாணைய பட்டியலில் 21 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.