மீன்வளத்துறை ஊழியருக்கு கொரோனா: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 28-ந் தேதி வரை மூடல்

மீன்வளத்துறை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வருகிற 28-ந்தேதி வரை மூடப்படுகிறது.

Update: 2020-06-22 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் செய்துங்கநல்லூர் அய்யனார்குளம்பட்டி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சென்றாராம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மீன்பிடி துறைமுகம் 3 நாட்கள் மூடப்பட்டது. தொடர்ந்து நேற்று மீண்டும் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

மீண்டும் மூடல்

இந்த நிலையில் அந்த மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் விடக்கூடிய பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், மீன்வளத்துறை ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை மூடுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவித்து உள்ளார்.

இதனால் மீன்பிடி துறைமுகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மீனவர்கள் இடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்