தென்காசியில் இந்து முன்னணியினர் சாலை மறியல் - 53 பேர் கைது
தென்காசியில் இந்து முன்னணியினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சம்பங்குளத்தில் 160 குடும்பத்தினர் காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் காலம் காலமாக வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்த கோவில் சிவசைலம் கிராமத்தில் உள்ளது. இது இவர்களது குல தெய்வம் ஆகும். இங்கு பச்சாத்தி மாடன் மண் பீடம் உள்ளது. இது அடிக்கடி சரிந்து வருவதால் இதனை சிமெண்டு பீடமாக மாற்றி கோவில் கட்ட ஏற்பாடு செய்தனர். இந்த கோவில் இருக்கும் இடம் பட்டா இடத்தில் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இதனை இடித்து விட்டனர்.
பட்டா இடத்தில் உள்ள கோவிலை உரிய காரணங்கள் இல்லாமல் முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியும் நேற்று காலை தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் விலக்கில் இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பாஜக நகர மண்டல தலைவர் திருநாவுக்கரசு உள்பட 53 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் வந்தனர். அனைவரையும் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.