தாராவியில் கொரோனா பரவல் வேகம் குறைந்தது - மத்திய சுகாதாரத்துறை பாராட்டு
தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்து உள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி சுமார் 2½ சதுர கி.மீ. பரப்பு மட்டுமே கொண்டது. இங்கு ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். 100 சதுர அடி வீட்டில் 10 பேர் வரை வசித்து வருகின்றனர். பொது கழிவறையை தான் பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். தெருக்களுக்கு பதில் சந்துக்கள் தான் இங்கு உண்டு. மோசமான சுகாதார கட்டமைப்பை கொண்ட தாராவியில் கொரோனா தொற்று பரவினால் தாங்காது என கணிக்கப்பட்டது.
இ்வ்வாறு தாராவி மக்களை பயமுறுத்திய கொரோனா கடந்த ஏப்ரல் 1-ந் தேதி இங்கு நுழைந்தது. இதையடுத்து கிடுகிடுவென வேகம் காட்டிய கொரோனாவால், இதுவரை 2 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80 பேரின் உயிரை கொடிய தொற்று பறித்து விட்டது. இதில் நேற்று புதிதாக 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 2 பேர் உயிரிழந்தனர்.
தாராவியில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக ெகாரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
இங்கு கடந்த மாதம் மட்டும் 1,400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் இதுவரை 396 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 45 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் மூலம் தாராவியை பற்றி கவலை கொண்ட தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் தற்போது பாதிப்பு குறைந்ததால் ஆச்சரியம் அடைந்து உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களும் ஆறுதல் அடைந்து உள்ளனர்.
வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை, பொதுகழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து வந்தாலும், சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் தாராவியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சென்று விட்டதால், இங்கு கொரோனா வீரியம் குறைய முக்கிய காரணங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. இதேபோல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்குதல் போன்ற பணியில் ஈடுபட்டதாலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி எடுத்த பல்வேறு நடவடிக்கையால் தாராவியில் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்து உள்ளது.
தாராவியில் ஏப்ரலில் 12 சதவீதமாகவும், மே மாதத்தில் 4.3 சதவீதமாக இருந்த கொரோனா பரவல் சதவீதம் இந்த மாதத்தில் (ஜூன்) 1.02 ஆக குறைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.