அடையாள அட்டையை காண்பித்தும் இ-பாஸ் இல்லை என மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ்காரர்
ஆவடியில் அடையாள அட்டையை காண்பித்தும் இ-பாஸ் இல்லை என மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ்காரர்.
ஆவடி,
கொரோனா வைரஸ் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருநின்றவூர் அருகே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எல்லையில் செவ்வாப்பேட்டை போலீசார் சோதனை சாவடி அமைத்து மாவட்டத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்னைக்கு வருபவர்களை சோதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி மின்வாரிய ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் இ-பாஸ் உள்ளதா? என போலீசார் கேட்டனர். அதற்கு இல்லை என்று கூறிய அவர், மின்வாரிய ஊழியரான தான் பணிக்கு செல்வதாக கூறி அடையாள அட்டையை காண்பித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த போலீசார், அவரிடம் இ-பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இல்லை என்றால் போகக்கூடாது என்று கூறினர். அதற்கு அவர் இபாஸ் எனக்கு தரவில்லை. மின்வாரிய ஊழியர் என்பதற்கான அடையாள அட்டை உள்ளதால் தயவு செய்து தன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்கும்படி கெஞ்சினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர், திடீரென மின்வாரிய ஊழியரை மனிதாபிமானமின்றி சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினார். ஒரு கட்டத்தில் மின்வாரிய ஊழியர் கையெடுத்து கும்பிட்டு கேட்டும், அவரை அடித்து உதைத்து அங்கிருந்து அனுப்பினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் மின்வாரிய ஊழியர் புகார் அளித்து உள்ளார்.