ஊரடங்கு தளர்வில் வாரச்சந்தைகள் திறக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஊரடங்கு தளர்வில் வாரச்சந்தைகள் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2020-06-21 22:30 GMT
கடையம்,

பழங்காலத்தில் வேளாண்மையை கண்டறிந்த ஆதி மனிதர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்து நாகரிக வளர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பண்டமாற்று முறையில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றதால், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் தேவைக்கு ஏற்ப சந்தைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பெரு நகரங்களில் தினசரி சந்தை நடைபெற்றாலும், பெரும்பாலான நகரங்களில் வாரம் ஒரு முறை கூடும் வாரச்சந்தை தனிச்சிறப்பு பெற்றது. அங்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து, தங்களது குடும்பத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

கால்நடைகள் விற்பனை

தென்காசி மாவட்டம் கடையத்தில் திங்கட்கிழமைதோறும் அதிகாலை 5 மணியில் இருந்து பிற்பகல் வரையிலும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், நவதானியங்கள், கருவாடு போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறும். மேலும் ஆடு, மாடு, கோழி விற்பனையும் களைகட்டும்.

ஆண்டு முழுவதும் விளைநிலங்களில் உழைத்து விளைவித்த பொருட்களையும், கால்நடைகளையும் வாரச்சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ததால் போதிய வருமானம் கிடைத்தது. மேலும் வாரச்சந்தை செயல்பட்டதால் வியாபாரிகள், தொழிலாளர்கள், ஓட்டல், டீக்கடைக்காரர்கள் என பல்வேறு தரப்பினரும் பலன் அடைந்தனர்.

வறுமையில் வாடும் தொழிலாளர்கள்

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, சுமார் 3 மாதங்களாக அனைத்து சந்தைகளும் மூடிக்கிடக்கின்றன. இதனால் விவசாயிகளும் தங்களது விளைபொருட்கள், கால்நடைகளை சந்தைப்படுத்த முடியாததால், போதிய வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர்.

மேலும் வியாபாரிகள், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். எனவே ஊரடங்கு தளர்வில் வாரச்சந்தைகளை மீண்டும் திறக்கவும், அங்கு சமூக இடைவெளி கடைபிடித்து வியாபாரம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்