ராட்சத குழாயில் உடைப்பு: புது ஆற்றுக்குள் விழும் பாதாள சாக்கடை கழிவுநீர் - நல்ல தண்ணீருடன் கலப்பதால் நோய் பரவும் அபாயம்
தஞ்சையில், பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு புது ஆற்றுக்குள் கழிவு நீர் விழுகிறது. நல்ல தண்ணீருடன் கழிவு நீரும் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சை மாரிக்குளம், கரந்தை, பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல் ஆகிய இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கழிவுநீர் சமுத்திரம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
அதன்படி தஞ்சை பூக்காரத்தெரு, அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை சாலை, பர்மா காலானி உள்ளிட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் மாரிக்குளத்தில் உள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய் மூலம் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் அருகே புதுஆற்றின் மீது நடைபாலம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் 2 பகுதியிலும் பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்பகுதியில் மட்டும் நடைபாலம் போடப்பட்டு அதில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அவ்வப்போது ஓட்டை விழுவதும், அது அடைக்கப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த குழாயில் ஒட்டை விழும்போது அதில் இருந்து கழிவுநீர் ஆற்றுக்குள் விழும்.
கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு ஆற்றில் தண்ணீர் செல்லாமல் கழிவு நீர் குழாயில் இருந்து ஆற்றுக்குள் விழுந்த கழிவு நீர் அனைத்தும் ஆற்றுக்குள்ளேயே தேங்கி கழிவு நீர் கால்வாய்போல் ஆறு காணப்பட்டது. பல மாதங்களாக இந்த கழிவு நீர் ஆற்றுக்குள் தேங்கி நின்றதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
இந்த நிலையில் தற்போது பாசனத்திற்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயின் கீழ்கரையில் ராட்சத குழாய் மண்ணுக்குள் செல்லும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேறுவதுபோல் கழிவுநீர் வெளியேறி வருகிறது.
ஆற்றின் கரையில் இந்த உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் ஆற்றுக்குள் விழுந்து நல்ல தண்ணீருடன் கலந்து செல்கிறது.
கழிவுநீர் ஆற்று நீருடன் கலந்து செல்வதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய் பரவும் அபாய நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “ராட்சத குழாயில் அடிக்கடி இது போன்று உடைப்பு ஏற்படுகிறது.
உடைப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் வந்து பார்த்து பேட்ஜ் ஒர்க் செய்வார்கள். அவர்கள் சென்ற அடுத்த ஒரு சில நாளில் மீண்டும் குழாய் உடைந்து அதில் இருந்து கழிவு நீர் வெளியேறும். இது கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாக நடந்து வருகிறது.
அதிகாரிகள் உடைப்பை சரி செய்வதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கழிவு நீர் வெளியேறும் நேரங்களில் இந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் வசிக்கவே முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் பழைய குழாய்களை அகற்றி விட்டு புதிய குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.