கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு பாராட்டு - எடியூரப்பா மகிழ்ச்சி
கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து இருப்பதால் முதல்-மந்திரி எடியூரப்பா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைபடுத்துவது, வீடுகளில் ஆய்வு நடத்தி மக்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் சேகரிப்பது, செல்போன் அடிப்படையிலான சேவை உள்ளிட்ட கர்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய அரசு பாராட்டியுள்ளது.
கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த வெற்றியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பங்கு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.
கைகோர்க்க வேண்டும்
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு குறித்து அரசு கூறும் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.