ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை கோரிய வழக்கு மீது விசாரணை - செப்டம்பர் 11-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை கோரிய வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
இதுகுறித்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால்-தென்கால் பாசனவாய்க்கால்கள் மூலமாக சுமார் 46 ஆயிரத்து 107 ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம் செயல்பட்டு வந்தது.
இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தாமிரபரணி பாசனக் கால்வாய்களில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது. முப்போக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறிவிட்டது. அதே போன்று கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலை உருவாகி விட்டது.
வழக்கு
இதனால் மாநில தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.