முழுஊரடங்கால் வெறிச்சோடிய காசிமேடு மீன்பிடி துறைமுகம்

முழுஊரடங்கால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-06-19 22:30 GMT
திருவொற்றியூர், 

சென்னையில் நேற்று முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வடசென்னை பகுதிகளான புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் பகுதிகளில் அதிகாலை முதலே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலை முழுவதும் வெறிச்சோடியது. அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் நடந்துதான் செல்லவேண்டும். இருசக்கர வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

எத்தனை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தாலும் சென்னை காசிமேடு மட்டும் எப்போதும் களைகட்டியிருக்கும். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் வரத்து இல்லை. 

இதனால் மீன் சந்தை விற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள் என ஒருவர்கூட காசிமேடு கடற்கரைக்கு வராததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இத்தனை நாட்களில் நேற்று மட்டும்தான் காசிமேடு கடற்கரை வெறிச்சோடி, ஆள்ஆரவாரம் இல்லாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்