5 நாள் போலீஸ் காவல் முடிவடைகிறது: காசி, கூட்டாளியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை - இன்று கோர்ட்டில் ஆஜர்

5 நாள் போலீஸ் காவல் முடிவடைய இருப்பதால், காசி, கூட்டாளியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இன்று நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

Update: 2020-06-19 08:22 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் போக்சோ வழக்கு உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதற்கிடையே காசி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் காசி, அவரது கூட்டாளி டேசன் ஜினோ ஆகிய 2 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் முன்னுக்கு பின் முரணாக இருவரும் பதில் அளித்ததை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

4-வது நாளான நேற்று காசி மற்றும் டேசன் ஜினோவிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் காசிக்கு உறுதுணையாக இருந்த சில முக்கிய பிரமுகர்கள் பெயர் விவரங்களையும் சேகரித்துள்ளனர்.

இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 5 நாள் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதனால் காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ ஆகிய இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 5 நாள் காவலில் அவர்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் விசாரணையால் கிடைத்த ரகசிய தகவல்கள் ஆகியவற்றை போலீசார் ஆவணங்களாக தயாரித்து கோர்ட்டில் ஒப்படைப்பார்கள்.

சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்றனர். வீட்டில் இருந்த காசி பெற்றோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னர் காசி வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினரிடமும் போலீசார் சில விவரங்களை கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்