கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது - பா.ஜனதா மாநில பொருளாளர் பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
ஈரோடு,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறை ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு நிறைவு அடைந்து உள்ளது. இந்த ஒரு ஆண்டு சாதனைகளை ‘2.ஓ’ என்ற பெயரில் பா.ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுக்கான ஓராண்டு சாதனை விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஈரோடு பா.ஜனதா அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழகத்துக்கு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி நிதியை பல்வேறு திட்டங்கள் வழியாக அளித்து இருக்கிறது. ஆனால், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் என்பது மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் வாட் வரியின் கீழ் இருப்பதால் மாநில அரசுகள் வரியை உயர்த்தி விலை ஏற்றத்தை அதிகரித்து உள்ளன. மாநில அரசுகள் நினைத்தால் வரியை குறைக்கலாம்.
இவ்வாறு பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில பிரசார அணி தலைவர் ஆ.சரவணன், வக்கீல் அணி செயலாளர் என்.பி.பழனிச்சாமி, மகளிர் அணி நிர்வாகி டாக்டர் சி.கே.சரஸ்வதி, வடக்கு மாவட்ட தலைவர் அஜித்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார், மாவட்ட செயலாளர் ஏ.பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.