வேலூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 63 பேருக்கு கொரோனா - தனியார் ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 63 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தென்னைமர தெருவில் தனியார் ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது.

Update: 2020-06-18 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களால் மற்ற நபர்களும் கொரோனாவினால் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் 59 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மண்டித்தெருவில் உள்ள அரிசி கடையில் பணியாற்றிய 29 வயது வாலிபருக்கு கடந்த 14-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாது.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து அதே பகுதிக்கு திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. அவரின் குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதியானது. 2 குடும்பத்தை சேர்ந்த 20 பேரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வேலூர் தென்னைமர தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அங்கு பணிபுரிந்தவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து, அந்த சென்டரை மாநகராட்சி அதிகாரிகள் மூடினார்கள். சைதாப்பேட்டையில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 15, 17 வயது சிறுமிகள் உள்பட 3 பேர், வேலூர் ரெட்டியப்பபா தெருவை சேர்ந்த தம்பதியினர், ஓல்டு காட்பாடி புருசோத்தமன்நகரை சேர்ந்த தாய், மகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 63 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்