நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கூறினார்.
நாமக்கல்,
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22-ந் தேதி முதல் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்படும் உமிழ்நீர் மாதிரிகள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா உறுதி செய்யப்படும் நபர்களுக்கு இங்கேயே சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 120 முதல் 160 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 4 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.