நெல்லையில் மேலாளருக்கு கொரோனா: மேலும் ஒரு வங்கி மூடப்பட்டது - சிறை அதிகாரிக்கும் தொற்று உறுதி
நெல்லையில் மேலாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மேலும் ஒரு வங்கி நேற்று மூடப்பட்டது. பாளையங்கோட்டை சிறை அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
நெல்லை,
சென்னை மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்துக்கு அதிக அளவு வந்து கொண்டு இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் பரிசோதனை செய்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் 522 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், 394 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நிலவரப்படி 152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கி மேலாளர் பாதிப்பு
இந்த நிலையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் முருகன்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி கிளையில் வேலை செய்து வந்தார். இதையடுத்து அந்த வங்கி மூடப்பட்டது.
உடனடியாக அங்கு சுகாதார அலுவலர்கள் சென்று கிருமி நாசினி தெளித்தனர். ஏற்கனவே பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வங்கி மூடப்பட்டது. தற்போது மேலும் ஒரு வங்கி மூடப்பட்டு உள்ளது.
சிறை அதிகாரிக்கும் தொற்று
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிகாரியாக கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் பாளையங்கோட்டை சிறை அலுவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மானூர், வள்ளியூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கருவூலக அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு வேலை செய்து வந்த உதவி என்ஜினீயர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருடன் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகம், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் மூடப்பட்டன.
3 குழந்தைகளுக்கு...
இதுதவிர நெல்லை மாநகர பகுதியில் ஒரு குழந்தைக்கும், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கும், நெல்லை டவுனை சேர்ந்த ஒரு குழந்தைக்கும் என 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகளுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.