சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 190 சர்க்கரை மூட்டைகளை திருடிய பொதுமக்கள் - வீடு, வீடாக சோதனை நடத்த போலீசார் முடிவு
பெலகாவியில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 190 சர்க்கரை மூட்டைகளை பொதுமக்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி சர்க்கரை மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பெலகாவி,
மராட்டியத்தில் இருந்து தலா 100 கிலோ எடை கொண்ட 300 சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் பெலகாவி மாவட்டம் சுதகத்தி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது. இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். கிளனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்த டிரைவரையும், கிளனரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி காகதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அப்பகுதி பொதுமக்கள் லாரியில் இருந்த 300 சர்க்கரை மூட்டைகளில் 190 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்றுவிட்டனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளை வரவழைத்து மீதமிருந்த 110 சர்க்கரை மூட்டைகளை மீட்டனர். பின்னர் அந்த சர்க்கரை மூட்டைகள் அரசு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று சோதனை நடத்தி சர்க்கரை மூட்டைகளை மீட்க போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.