விழுப்புரத்தில் பகலில் சுட்டெரித்த வெயில்; மாலையில் மகிழ்வித்த மழை
விழுப்புரத்தில் பகலில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலையில் மழை பெய்து பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்தது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த 10 நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. சதத்தையும் கடந்து வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் நேற்றும் விழுப்புரம் நகரில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. நேற்று வெயிலின் அளவு 101 டிகிரியாக பதிவான நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. மாலை 6 மணிக்கு பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் குப்பைகளும், புழுதியுமாக பறந்தது.
மாலை 6.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 20 நிமிடத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. திடீரென பெய்த இந்த மழையினால் மாலை வேளையில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் விழுப்புரம் அருகே கோலியனூர், பிடாகம், கண்டமானடி, பெரும்பாக்கம், காணை, சாலைஅகரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. பகலில் சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் மாலையில் பெய்த மழையால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.